வெறுமையாக அமையவுள்ள தமிழ் புத்தாண்டு! - ஐபில் ஃபெஃப்சியால் பாதிப்பு.

பெப்சி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்னை இழுத்துக்கொண்டே செல்வதால் அடுத்த மாதம் வெளியாக வேண்டிய பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தள்ளிப்போகிறது. பெரிய ஹீரோக்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் பண்டிகை நாட்களில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் புதிய அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இந்நிலையில் பெப்சி தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் நடந்து வந்தது. இப்பிரச்னை இழுபறியில் இருப்பதால் கடந்த சில நாட்களாக ஷூட்டிங் நடைபெறவில்லை. இதனால் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் மே மாதம் வெளிவர வேண்டிய பெரிய பட்ஜெட் படங்கள், ரிலீஸ் ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கார்த்தி நடித்துள்ள ‘சகுனி’ ஏப்ரல் 14-ம் தேதியும் அஜீத் நடித்த ‘பில்லா 2’ ஏப்ரல் 27ம் தேதியும் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இன்னும் ஷூட்டிங் பாக்கி இருப்பதால் ரிலீஸ் தேதி முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது. இதே போல மே மாத ரிலீஸுக்கு முடிவு செய்திருந்த சூர்யாவின், ‘மாற்றான்’, கமலின் ‘விஸ்வரூபம்’ படங்களும் தள்ளிப்போக இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே தமிழ்ப் புத்தாண்டுக்கு பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகாதது இப்போதுதான் எனக் கூறப்படுகிறது.
 
‘‘பொதுவாக, கோடையில் தியேட்டர் வசூல் அதிகமாக இருக்கும். இந்த வருடம் அதற்கான வாய்ப்பில்லை என்று தெரிகிறது. ஏப்ரலில் ஐபிஎல் தொடங்குவதால் சிறு பட்ஜெட் படங்கள் வழக்கமாக ரிலீஸ் ஆகாது. பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் பெரிய ஹீரோ நடித்த படங்களுக்கு ஐபிஎல் பிரச்னை இல்லை என்பதால் அப்போது ரிலீஸ் ஆவது வழக்கம். இந்த வருடம் பெப்சி- தயாரிப்பாளர்கள் ஊதிய பிரச்னை காரணமாக படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. அதனால், சிறு பட்ஜெட் படங்கள் அதிகமாக ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது’’ என்று விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment